search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரம்ஜான் நோன்பு"

    சொந்தம் என்பது இறைவனுடன் இணைவதற்கு உரிய பாலமாகும். இந்த இணைப்பு பாலத்தில் கோளாறு இருந்தால் இறைவனிடம் சேர முடியாது.
    புனிதமான இந்த ரமலான் காலத்தில் நாம் செய்யும் நல்ல அமல்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், பாவமன்னிப்பு கிடைத்து சொர்க்கம் செல்ல வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். இதற்கு நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் ஒன்றான சொந்தங்களைப்பேணுதல் என்பதை நாம் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும்.

    ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தங்கள் ஒட்டகத்தில் வந்த போது, ஒரு கிராமவாசி அவரை வழிமறித்து, ‘இறைத்தூதரே, ஒரு மனிதனை சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும், நரகத்தை விட்டு தூரமாகவும் ஆக்குவதற்கு உரிய நற்செயல் எது? என்று கேட்டார்.

    அதற்கு நபிகள் (ஸல்) கீழ்க்கண்ட 5 விஷயங்களை தெரிவித்தார்கள்.

    1. அல்லாஹ்வை வணங்க வேண்டும்
    2. எந்த நிலையிலும் இறைவனுக்கு இணைவைக்க கூடாது
    3. கடமையாக்கப்பட்ட 5 நேரத்தொழுகையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்
    4. இறைவனால் விதிக்கப்பட்ட ஜகாத்தை முழுமையாக கொடுக்க வேண்டும்.
    5. சொந்தங்களை சேர்ந்திருக்க வேண்டும்.

    சொந்தம் என்பது இறைவனுடன் இணைவதற்கு உரிய பாலமாகும். இந்த இணைப்பு பாலத்தில் கோளாறு இருந்தால் இறைவனிடம் சேர முடியாது. நரகத்தின் மேல்போடப்பட்டுள்ள பாலத்தின் பெயர் ‘ஸிராத்துல் முஸ்தகீம்’. சொர்க்கம் செல்பவர்கள் அனைவரும் இந்த பாலத்தைக் கடந்து தான் போக வேண்டும். இது இறைவனின் கட்டளை. இதையே திருக்குர்ஆன்(19:71) இவ்வாறு குறிப்பிடுகிறது. ‘மேலும் அதனை (ஸிராத்துல் முஸ்தகீம் எனும் பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.

    தர்மம் செய்தல், சொந்தங்களுடன் சேர்த்து வாழ்தல், மார்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்தல், எப்பொழுதும் அங்கசுத்தியுடன் (ஒளு) இருத்தல் மற்றும் பெற்றோருக்கு கட்டுப்பட்டு நடத்தல் ஆகிய 5  விஷயங்களை ஒருவர் நிரந்தரமாக செய்தால் அவருக்கு மலை போன்ற அளவு நன்மையும், உணவு, உறைவிடத்தில் விசாலமும் கிடைக்கும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘ மேலும் அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவு முறைகளை பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளை பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக்கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 13:21)

    இறைவனின் கட்டளைப்படி வாழ்பவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன் சொர்க்கத்திலும் இடம் கிடைக்கும். எனவே இறைவன் வகுத்த வழியில் வாழ்வோம், சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்ந்து இறைவனின் அருளையும், சொர்க்கத்தையும் நாம் பெறுவோம். அதற்கு இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமீன்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.

    எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால் நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும்.
    நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ரமலான் மாதம் பற்றி குறிப்பிடும்போது ‘இது மனிதர்களுடன் கலந்துறவாடும் மாதம்’ என்பார்கள். இந்த ரமலான் மாதத்தில் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது, அவர்களின் சுகதுக்கங்களில் கலந்துறவாடுவது போன்ற நன்மையான காரியங்களில் அதிகம் ஈடுபடவேண்டும்.

    நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு வைக்கும் (ஸஹர்) நேரத்திலும், நோன்பு திறக்கும் (இப்தார்) நேரத்திலும் எவரேனும் ஒரு ஏழையை தன்னுடன் வைத்து அவருக்கும் உண்ணக்கொடுத்து, தானும் சாப்பிடுவார்கள். அப்படி யாரேனும் சாப்பிட வரவில்லை என்றால், எதுவுமே சாப்பிடாமல் பட்டினியாக நோன்பு வைப்பார்கள். தாங்கள் ஏழ்மை நிலையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு வயிறு நிரம்ப உணவு கொடுப்பதை நபித்தோழர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

    நோன்பு காலத்தில் ஒருநாள் ஹசரத் அலி(ரலி) அவரது மனைவி பாத்திமா(ரலி), அவர்களது மகன்கள் ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி) அவர்களது பணியாளர் அல்ஹாரித் (ரலி) ஆகியோர் சாப்பிட எதுவும் இன்றி பட்டினியாக நோன்பு வைத்தனர். இந்த நிலையில் அன்னை பாத்திமா(ரலி) தன்னிடம் இருந்த ஆடை ஒன்றை அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து, இதை கடைத்தெருவில் விற்று உணவு வாங்கிவரும்படி கூறினார்கள்.

    அலி (ரலி)யும் கடைத்தெருவுக்குச்சென்று அந்த ஆடையை 6 திர்ஹம் பணத்திற்கு விற்றுவிட்டு அந்தப்பணத்துடன் வீடு திரும்பினார்கள். அப்போது வழியில் சிலர் பசியோடு இருப்பதைக்கண்டு அந்த 6 திர்ஹம் பணத்தையும் அவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டார்கள்.

    பின்னர் மனைவி, குழந்தைகளிடம் என்ன சொல்வது என்று நினைத்தபடி நடந்து வந்தார்கள். அப்போது ஒருவர் ஓட்டகம் ஒன்றுடன் வந்தார். இதை வாங்கிக்கொள்ளுமாறு அலி(ரலி)யிடம் கூறினார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்ல பிறகு பணம் தாருங்கள் என்றார். அலி (ரலி)யும் அந்த ஓட்டகத்திற்கு 100 திர்ஹம் பணம் தருவதாக கூற வாங்கிக்கொண்டு சிறிது தூரம் வந்த போது வேறு ஒருவர் அலி(ரலி)யிடம் இந்த ஓட்டகத்தை தனக்கு விற்க விருப்பமா என்றார். ஓட்டகத்திற்கு 1

    60 திர்ஹம் விலை தருவதாகவும் கூறினார். அலி (ரலி)யும் அந்த ஒட்டகத்தை 160 திர்ஹமிற்கு விற்றார். அதில் 100 திர்ஹமை ஒட்டகத்தின் உரிமையாளருக்கு கொடுத்து விட்டு 60 திர்ஹம் பணத்துடன் வீடு திரும்பினார்.

    நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தன் மனைவியிடம் கூறினார். பின்னர் இதை நபிகளாரிடமும் அவர்கள் தெரிவித்தனர். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள், ‘அலியே தாங்கள் அல்லாஹ்வுக்காக அந்த 6 திர்ஹமை ஏழைகளுக்கு தானம் செய்தீர்கள். அதனால் அல்லாஹ் வானவர் ஜிப்ரீயலை வியாபாரியாகவும், வானவர் மீகாயிலை விலைக்கு வாங்குபவராகவும் அனுப்பி உங்களுக்கு நன்மை செய்தான்’ என்றார்கள்.

    எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால் நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.

    இந்த ரமலானில் அதிகமாக இறைவனை ‘திக்ர்’ செய்து பாவமன்னிப்பு பெற்று சொர்க்கவாதிகளாக நாம் அனைவரும் மாற பிரார்த்திப்போம், ஆமீன்.
    புனித மிகு ரமலான் காலத்தில் எந்த நேரமும் இறைவனின் நினைவிலேயே இருக்க வேண்டும். அதிகமாக ‘திக்ர்’ செய்ய வேண்டும். குறிப்பாக ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை அதிகம் சொல்ல வேண்டும். இறைவனை நினைவு கூற இது தான் சிறந்த சொல் ஆகும், இதை சொல்வதன் மூலம் ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.

    நபி மூஸா (அலை) அவர்கள், அல்லாஹ்விடம் ‘இறைவா, உயர்ந்த ஒரு கலிமாவை எனக்கு கற்றுக்கொடு’ என்று கேட்டார்கள். அப்போது இறைவன், ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்று கூறுங்கள் என்றான்.

    இதற்கு மூஸா (அலை) அவர்கள், ‘இறைவா, இந்தக்கலிமாவைத்தான் எல்லாரும் சொல்கிறார்களே’ என்ற போது, இறைவன் இவ்வாறு கூறினான்:

    ‘மூஸாவே, இந்தக்கலிமாவை ஒரு தட்டிலும், இந்த உலகில் உள்ள அனைத்தையும் மறு தட்டிலும் வைத்துப்பார். அப்போது கலிமா இருக்கும் தட்டு மட்டுமே கனமுள்ளதாக இருக்கும்’.

    அந்த அளவுக்கு இந்த கலிமா சிறப்புமிக்கதாகும். இதை வலியுறுத்தும் வகையில் இந்தக்கலிமாவை அதிகமாக சொல்லிவருமாறு நபிகளாரும் கூடியிருக்கிறார்கள்.

    ஒருமுறை, அபூ ஷுரைரா(ரலி) அவர்கள் இறைத்தூதல் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ‘மறுமையில் உங்கள் பரிந்துரை மூலம் நற்பாக்கியம் பெறுபவர் யார்?’ எனக்கேட்டார்கள்.

    அதற்கு நபியவர்கள், ‘என் பரிந்துரையின் மூலம் நற்பாக்கியங்கள் பெறுபவர் யார் என்றால் எவர் உள்ளத்தூய்மையுடன் மனதாலும், உள்ளத்தாலும் ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்று கூறுவாரோ அவர் தான்’ என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

    பொதுவாகவே காலையிலும், மாலையிலும் இறைவனை அதிகமாக நினைவுகூர வேண்டும். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ஈமான் கொண்டவர்களே, அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத்துதி செய்யுங்கள்(33:41-42)

    குறிப்பாக ரமலான் மாதம் இறையருள் பொழியும் மாதமாகும். இறைவன் கீழ்வானம் இறங்கிவந்து தம் அடியாருக்கு அருள்புரியும் மாதமாகும். இந்த காலங்களில் நாம் அதிகமாக தொழுகையிலும், இறைவனை திக்ர் செய்து நினைவு கூர்வதிலும் ஈடுபட வேண்டும். இதன் மூலம் பாவமன்னிப்பு பெற்று இறைவனின் அருளுக்கு நாம் பாத்திரமாகலாம்.

    அல்லாஹ் செய்யக்கூடிய அருளில் மிகப்பெரிய அருள் என்னவென்றால், நமது பாவங்களை மன்னிப்பது தான். அந்த மன்னிப்பு நமக்கு கிடைத்துவிட்டால் அதைவிட வேறு பெரிய பாக்கியம் எதுவாக இருக்க முடியும்.

    எனவே இந்த ரமலானில் அதிகமாக இறைவனை ‘திக்ர்’ செய்து பாவமன்னிப்பு பெற்று சொர்க்கவாதிகளாக நாம் அனைவரும் மாற பிரார்த்திப்போம், ஆமீன்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    புனிதமான இந்த ரமலான் காலத்தில் செய்ய வேண்டிய நன்மையான காரியங்கள் ஏராளமாக உள்ளன. அதில் முதலிடம் பிடிப்பது இறைவனின் வேதமான திருக்குர்ஆனை அதிகமாக ஓழுவது
    புனிதமான இந்த ரமலான் காலத்தில் செய்ய வேண்டிய நன்மையான காரியங்கள் ஏராளமாக உள்ளன. அதில் முதலிடம் பிடிப்பது இறைவனின் வேதமான திருக்குர்ஆனை அதிகமாக ஓழுவது. இறைத்தூதர்கள் அனைவருக்கும் வேதங்களை வானில் இருந்து இறக்கி அருளினான் இறைவன். திருக்குர்ஆன் உள்பட அனைத்து வேதங்களும் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது.

    நபி இப்ராகிம்(அலை) அவர்களுக்கு ‘சுஹ்பு’ என்னும் ஏடுகள் ரமலான் மாதம் முதல் நாளிலும், நபி தாவூத் (அலை) அவர்களுக்கு ‘ஜபூர்’ எனும் வேதத்தை 18-ம் நாளும், நபிமூசா (அலை) அவர்களுக்கு ‘தவ்ராத்’ எனும் வேதத்தை 12-ம் நாளும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் 27-ம் நாளிலும் இறைவன் அருளினான்.

    இது குறித்து திருக்குர்ஆன் (2:185) இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால், அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து, நேரான வழியை தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.

    இந்த ரமலான் நோன்பு காலத்தில் அதிகமாக திருக்குர்ஆன் வசனங்களை ஓத வேண்டும். மறுமை நாளில் யாரும் யாருக்கும் எந்த பரிந்துரையும் செய்ய முடியாத நாளில் நாம் ஓதிய திருக்குர்ஆனும், கடைபிடித்த நோன்பும் சொர்க்கத்தை அளிக்கும் படி நமக்காக இறைவனிடம் பரிந்துரை செய்யும்.

    ‘இறைவா, நோன்பு காலத்தில் இவன் உண்ணாமல், பருகாமல் உனக்காக நோன்பு இருந்தான். எனவே இவனுக்காக இன்று நான் (நோன்பு) சொர்க்கத்தை பரிந்துரை செய்கிறேன்’ என்று நோன்பு கூறும்.

    ‘இறைவா, நோன்பு காலத்தில் இவன் உறங்காமல் விழித்திருந்து திருக்குர்ஆன் ஓதினான். எனவே அவனுக்காக இன்று நான் (திருக்குர்ஆன்) சொர்க்கத்தை பரிந்துரை செய்கிறேன்’ என்று திருக்குர்ஆன் கூறும்.

    இந்த இரு பரிந்துரைகளையும் இறைவன் ஏற்றுக்கொண்டு அந்த மனிதனை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பான்.

    திருக்குர்ஆனை தவறாமல் ஓதி வரவேண்டும் என்பது குறித்து திருமறை இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘நாம் யாருக்கு வேதத்தை கொடுத்ததோமோ அத்தகையோர், அவர்கள் அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள் தான் இதை அல்லாஹ்வின் வேதமென விசுவாசிப்பார்கள்: மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ அத்தகையோர் தான் நஷ்டவாளர்கள். (திருக்குர்ஆன் 2:121)

    இத்தனை மகிமை நிறைந்த திருக்குர்ஆனை இந்த நோன்பு காலத்தில் நாம் அதிகமாக ஓதி இறையருளுடன் மறுமையில் சொர்க்கத்தையும் பெறுவோம், ஆமீன்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    ரமலான் நோன்பு காலம் முழுவதும் உடலின் ஒவ்வொரு உறுப்பும் பேணிக்காக்கப்பட வேண்டும். அதற்கு உடல் கட்டுப்பாடும் அவசியம் தேவை.
    நோன்பின் மூலம் உள்ளம் தூய்மை அடையும், உடல் ஆரோக்கியம் பெறும், இறைவனின் அருளையும் பெற முடியும். ஆனால் காலை முதல் மாலை வரை உண்ணாமல், பருகாமல் இருப்பது மட்டும் நோன்பு அல்ல.

    ரமலான் நோன்பு காலம் முழுவதும் உடலின் ஒவ்வொரு உறுப்பும் பேணிக்காக்கப்பட வேண்டும். அதற்கு உடல் கட்டுப்பாடும் அவசியம் தேவை.

    அவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டிய உடல் உறுப்பிகளில் முதல் நிலையில் இருப்பது கண்கள். அதன் பார்வை விசாலமானது. நல்லது- கெட்டது என்று அனைத்தையும் எந்த பாகுபாடும் இன்றி பார்க்கக்கூடியது கண்கள்.

    எனவே தன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘பார்வை என்பது சைத்தானின் விஷம் கலந்த அம்புகளில் ஒன்று. அல்லாஹ்வின் தண்டனைக்கு பயந்து தன் பார்வையை எவர் பாதுகாத்து கொள்வாரே அவருக்கு உள்ளத்தில் ஈமான் பாதுகாக்கப்படும்’ (நூல்: ஹாகிம்).

    அடுத்தது நாக்கு. இதன் மூலம் ஏராளமான நன்மைகளும் கிடைக்கும், தீமைகளும் உண்டாகும். எனவே இந்த ரமலான் காலங்களில் நன்மைகள் மட்டுமே செய்யும் வகையில் நாக்கின் செயல்கள் அமைய வேண்டும். பொய் சொல்வது, கோள் மூட்டுவது, பொய்யான சத்தியம் செய்வது, தகாத வார்த்தைகளை பேசுவது போன்ற தீய செயல்களை செய்யக்கூடாது. இதனால் தான் நோன்பு காலத்தில் யாராவது வீண்தாக்கம் செய்யவோ, சண்டைக்கோ வந்தால் பதிலுக்கு நாம் அது போல செய்யக்கூடாது. ‘நான் நோன்பாளி’ என்று கூறிவிட்டு அங்கிருந்து ஒதுங்கி விட வேண்டும்.

    இது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) இவ்வாறு அறித்தார்கள்: நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே நோன்பாளி கொட்ட பேச்சுகளை பேச வேண்டாம். முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி’ என்று  இருமுறை கூறட்டும்.

    இதுபோலவே நம் உடல் உறுப்புகளான கை, கால்கள், வாய், வயிறு போன்ற உடல் உறுப்புகளை தவறான செயல்களில் இருந்து விலக்கி பாதுகாக்க வேண்டும். அப்போது தான் நோன்பை சரியாக நிறைவேற்றிய பலன் கிடைக்கும். நோன்பு வைத்துக்கொண்டு தீய செயல்களை செய்தல், தீயவற்றை பார்த்தல், தீயவற்றை பேசுதல் தடுக்கப்பட்டவற்றை உண்ணுதல் போன்றவற்றை செய்தால் நோன்பினால் எந்த பலனும் கிடைக்காது.

    எனவே தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் போது ‘எத்தனையோ நோன்பாளிகள் வெறும் தாகம், பசியோடு மட்டும் உள்ளனர். அவர்கள் நோன்பின் நன்மையை அடைந்து கொள்வதில்லை’ என்றார்கள். ( அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, நூல்: நஸயி).

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    இஸ்லாத்தில் நோன்பு என்பது தொழுகையைப்போல ஒரு கடமையாகும். தொழுகை எப்போது யார் மீது கடமை ஆகிறதோ, அப்போது அவர் மீது நோன்பும் கடமை ஆகிறது.
    இஸ்லாத்தில் நோன்பு என்பது தொழுகையைப்போல ஒரு கடமையாகும். தொழுகை எப்போது யார் மீது கடமை ஆகிறதோ, அப்போது அவர் மீது நோன்பும் கடமை ஆகிறது.

    ‘நோன்பு’ என்றால் ‘தடுத்துக்கொள்ளுதல்’ என்பது பொருளாகும். உண்ணாமல், பருகாமல், நோன்பை முறித்துவிடக்கூடிய எந்த செயலையும் செய்யாமல், இறைவனின் அருளைப்பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கடைப்பிடிக்கப்படுவது தான் நோன்பு.

    தொழுகையை வேண்டும் என்றே விடுவது எப்படி குற்றமோ, அது போல நோன்பை வேண்டும் என்றே விடுவதும் குற்றமாகும். இஸ்லாத்தில் அனைத்து வணக்க வழபாடுகளும் தூய்மையான எண்ணத்தில் அனைத்தும் அல்லாஹ் ஒருவனின் அருளைப்பெறுவதற்கே என்று செய்ய வேண்டும். நமது  நற்செயலுக்கு ஏற்ப நன்மைகள் கிடைக்கும். ஆனால் நோன்பாளிக்கு மட்டும் இறைவன் நேரடியாக அதற்குரிய கூலியை தருகிறான்.

    இதுகுறித்து நபி மொழி வருமாறு...

    நோன்பு நோற்றவன் தன் உணவையும், பானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி)

    இதற்கு காரணம் என்னவென்றால், மனிதனின் தொழுகை தான தர்மங்கள் குறுகிய நேரத்தில் செய்யக்கூடியது. அதோடு இந்த செயல்களை பிறர் அறியவும் வாய்ப்பு உள்ளது.

    ஆனால் நோன்பு என்பது அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை நீடிக்க கூடியது. ஒருவன் நோன்பாளி என்பதையும் அவர் சொன்னால் தான் மற்றவர்களுக்கு தெரியும். நோன்பு என்பது இறைவனுக்கு அவனது அடியானுக்கும் இடையே உள்ள தொடர்பை பலப்படுத்தும் செயலாகும்.

    மேலும் இந்த நோன்பு காலத்தில் இறைவனுக்காக பசி, தாகம் மற்றும் இச்சைகள் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பது இறைவனுக்கு மனிதனுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. எனவே தான் ‘நோன்பாளிக்கு உரிய கூலியை நானே வழங்குவேன்’ என்று  இறைவன் கூறுகின்றார்.

    சிறப்பு மிக்க இந்த பாக்கியத்தை நாம் அனைவரும் அடைந்து கொள்ள வேண்டும். இதற்காக நாம் நோன்பு காலத்தில் அனைத்து தொழுகைகளையும் உரிய நேரத்தில் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இது தவிர உபரியான தொழுகைகளையும் கூடுதலாக தொழ வேண்டும் தான தர்மங்களை அதிகப்படுத்த வேண்டும். உற்றார், உறவினர்களை பேணிக்காக்க வேண்டும். இதன் மூலம் இறைவன் தரும் கூலியை ஒவ்வொரு நோன்பாளியும் பெற முடியும்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை
    ஒரு மனிதன் நோன்பு பிடிக்க தொடங்கிய காலம் முதல் சொர்க்கம் செல்லும் வரை அந்த மனிதனுக்காக சொர்க்கம் தன்னை அலங்கரித்துக் கொண்டே இருக்கும்.
    ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் மனிதனுக்கு சொர்க்கம் அலங்கரித்து வைக்கப்படும். சொர்க்கத்தை பார்த்து இறைவன் இவ்வாறு கட்டளையிடுவான். உலகத்தில் சிரமத்தில் தவித்த என் அடியான் இங்கே வந்து ஓய்வு எடுத்து நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக சொர்க்கமே உன்னை அலங்கரித்து கொள்’

    எனவே ஒரு மனிதன் நோன்பு பிடிக்க தொடங்கிய காலம் முதல் சொர்க்கம் செல்லும் வரை அந்த மனிதனுக்காக சொர்க்கம் தன்னை அலங்கரித்துக் கொண்டே இருக்கும்.

    நோன்பு வைத்து அதன் மூலம் பெற்ற நன்மையால் சொர்க்கம் செல்லும் அடியான் அந்த சொர்க்கத்தின் சிறப்பைப்பார்த்து இவ்வாறு கூறுவானாம்: ‘ வருடத்தில் ஒரு மாதம் தானே நேன்பு வைத்தேன். அதற்கே இவ்வளவு அழகான சொர்க்கமா?. இது முன்பே தெரிந்திருந்தால் வருடம் முழுவதும் நோன்பு நோற்று அதிக நன்மைகள் செய்திருப்பேனே.

    மனிதன் கற்பனை செய்து பார்க்க முடியாத பல்வேறு சிறப்புகளை பெற்ற சொர்க்கத்தில் நாம் அனைவரும் இடம் பெற உதவும். இந்த ரமலான் மாதத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முறையாக நோன்பு வைத்து தொழுகையில் ஈடுபட்டு தான தர்மங்கள் செய்து பாவமன்னிப்பு கேட்டு இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

    நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியபடி இந்த ரமலான் நாம் அதிகமதிகம் இறையவனிடம் பிரார்த்தனை செய்து நரகத்தை விட்டு பாதுகாப்பு தேடி சொர்க்கத்தை கேட்க வேண்டும். அதிலும் குறிப்பாக நோன்பு கடமையை நிறைவேற்றுபவர்களுக்கு என்று ஒரு சொர்க்கம் உண்டு. அதன் பெயர் ‘ரய்யான்’.

    மறுமை நாளில் ஒரு மனிதனின் பாவ புண்ணிய கணக்குகள் இறைவன் முன்பு சமர்ப்பிக்கப்படும். அப்போது அந்த மனிதன் தத்தளித்து கொண்டு இருப்பான். அப்போது இறைவன் தரப்பில் இருந்து ‘ரமலான் மாதங்களில் நோன்பு வைத்திருப்பவர்கள் எங்கே?’ என்று ஒரு அழைப்பு வரும். இதைக்கேட்டு நோன்பு வைத்தவர்கள் எழுந்து நிற்பார்கள். அப்போது அவர்களை பார்த்து இறைவன் ‘நீங்கள் அனைவரும் ரய்யான் என்ற இந்த சொர்க்கச்சோலைக்குள் செல்லுங்கள்’ என்பான். இதையடுத்து நோன்பாளிகள் அனைவரும் அந்த வழியாக சொர்க்கத்திற்குள் செல்வார்கள். கடைசி நோன்பாளி சென்றதும் அந்த வழிமூடப்படும்.

    “ எவர் நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் நேரத்தில் அவரின் தாகம் நீங்க நீர் வழங்கினாரே அவருக்கு மறுமையில் ‘ஹவ்ழுல் கவ்தர்’ என்ற நீர் தடாகதில் இருந்து அல்லாஹ் தண்ணீர் வழங்குவான். அதன் மூலம் சொர்க்கம் செல்லும் காலம் வரை அவருக்கு தாகம் என்பது ஏற்படாது” என்பது நபி மொழியாகும். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது ‘ நன்மையான காரியங்களை போட்டிபோட்டுக்கொண்டு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துவார்கள்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி தாங்கல் சென்னை.
    ×